கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.
இந்தப் பாட்டு கம்பன் எழுதியதில்லை. தனிப்பாடல்களில் ஒன்று. யாரோ பெயர் தெரியாத புலவர் எழுதி, தனிப்பாடல்களாகத் தொகுக்கப்பட்ட பல நூறு பாடல்களில் இதுவும் ஒன்று. கம்பன் எழுதியதுதான் என்றே பலர் நம்புகின்றனர். இல்லை. 'அஞ்சிலே ஒன்றுபெற்றான்' பாடல் எப்படிக் கம்பன் பாடல் இல்லையோ, அப்படியே இதுவும் கம்பனுடையதில்லை. முழுப்பாடலை இங்கே தருகிறேன்.
விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும்
படம்கொண்ட பாந்தள் வாயிற்பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத்துற்றபோது
கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.
Many a thanks to Jaybee (http://www.treasurehouseofagathiyar.net/25600/25654.htm)and Dondu Ragavan (http://dondu.blogspot.com/2006/08/blog-post_31.html) for this information
இந்தப் பாடலின் முதல் அடியில் வரும் 'விடம் கொண்ட மீன்'. இதில் ஒரு ரசமான விஷயம் அடங்கியுள்ளது. மீனைப் பிடிப்பதற்குப் பலவழிகளை உலகெங்கும் கையாள்கிறார்கள். ஈட்டியால் குத்துதல், வலைவிசுதல், வலை கட்டுதல், பரி போடுதல், தூண்டில் போடுதல், துண்டு விசிறுதல், போன்றவை.
அவற்றில் ஒன்று விஷத்தைத் தண்ணீரில் கலத்தல். இந்த முறை தடாகங்கள், குளங்கள் போன்றவற்றில் மட்டுமே பயன்படுத்தப்படும். Aconite என்றொருவகை விஷம் இருக்கிறது. அதனை 'வச்சநாவி' என்று சொல்வார்கள். இது ஒரு Neuro-muscular poison. இது உடலில் கலந்தால் உடலின் தசைகள் செயலிழக்கும். தசைகளை இஷ்டப்படி இயக்கமுடியாது. ஒரு மாதிரியான paralysis அது. நன்கு நினைவு, சிந்தனை எல்லாமே இருக்கும். ஐம்புலன்களும் முழுமையாக வேலை செய்யும். ஆனால் தசைகளை மட்டுமே இயக்கமுடியாது. சுற்றி நடப்பனவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு, புரிந்துகொண்டு, முழுக்க முழுக்கச் செயலற்ற நிலையில் கிடக்கும் பரிதாபமான நிலை அது.
வச்சநாவியை Arrow poison, dart poison-ஆகப் பயன்படுத்துவார்கள். மலேசியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய திரெங்காணுவில் மீன் பிடி விஷமாகப் பயன்படுத்துகிறார்கள். மீன்கள் திரியும் குளங்களில் வச்சநாவியை இரவோடு இரவாகக் கலப்பார்கள். காலையில் மீன்கள் செயலற்று உயிருடன் மிதக்கும். அப்படியே அரித்தெடுத்துக்கொண்டு செல்வார்கள்.
இராமபாணம் போர்க்களத்தில் இறங்கக்கண்ட இராவணனும் விடம் கொண்ட மீனைப்போன்றே எதுவுமே செயலற்ற நிலையில் இருந்திருக்கிறான். இறந்துபோகப்போவதையும், தப்பிக்கவே முடியாது என்ற நிலையையும் நன்கு உணர்ந்த நிலையில் பதிலுக்குத் தன்னைக்காத்துக்கொள்ளவோ அல்லது தாக்குதல் தொடுக்கவோ முடியாத நிலையில் இருந்தான்.
இந்தப் பாடலின்மூலம் நமக்கு ஓர் உண்மை புலப்படுகிறது. தற்சமயம் திரெங்காணு மாநிலத்தில் எங்கோ ஓரிடத்தில் வழக்கத்தில் இருக்கும் மீன் பிடி முறை, தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. பிற்காலங்களில் அது மறைந்துபோயிருக்கலாம்.